உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது மிசோராம் காவல்துறை
பானாஜி: போதைப் பொருள், விலங்குகள் கடத்தலை வெகுவாகக் கட்டுப்படுத்தியதை அடுத்து, மிசோராம் மாநில காவல்துறை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் மிசோராம் காவல்துறையினர் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 468 விலங்குகளைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 930 கிலோ போதைப் பொருள்களும் மிசோராம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கடமை, அர்ப்பணிப்பு கூடிய செயல்பாடுகளைப் பதிவு செய்யும் பிரிட்டனில் உள்ள அமைப்பின் உலக சாதனைப் புத்தகத்தில் மிசோராம் காவல்துறை இடம்பெற்றுள்ளது.
அரசு: விமானப் பயணிகள் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும்
புதுடெல்லி: அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் உள்ளதாக குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் 1,200 விமானங்களைக் கையாளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொரோனாவுக்கு முந்திய காலகட்டத்தில் உள்நாடு, வெளிநாட்டுப் பயணிகள் என மொத்தம் 20 கோடி விமானப் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் சேவை அளித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஓய்வு பெறும் தலைமை நீதிபதிகளுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: இந்திய தலைமை நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்கு வாடகையில்லா தங்குமிடத்தைப் பெறுவார்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டு காலம் அவர்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்கு ஓட்டுநர் நியமிக்கப்படுவார் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உளளார். அவருடன் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியும் மகள் பிரியங்கா காந்தியும் உடன் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இருவரும் எந்த நாட்டுக்குச் செல்கிறார்கள், எப்போது புறப்படுகிறார்கள் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு செல்வதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி செய்துள்ளார்.
ஜம்முவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: ஜம்முவில் நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.9 புள்ளிகளாகப் பதிவானது. அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

