புதுடெல்லி: டெல்லி மாநில அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 மில்லியன் டாலர் செலவுசெய்து புதுடெல்லியின் பெரும்பாலான பொதுப் போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகை 834 மில்லியன் வெள்ளிக்குச் சமம்.
நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவது இதன் நோக்கம்.
உலகின் ஆக மோசமான காற்றுத் தூய்மைக்கேடு நிலவும் நகரங்களில் புதுடெல்லியும் ஒன்று. அதனால் காற்றில் மாசின் அளவைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது டெல்லி மாநில அரசாங்கம்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 80 விழுக்காட்டுப் பேருந்துகளை மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கூடுதலான மின்னூட்டும் இடங்களை அமைப்பதும் 25 விழுக்காட்டு மின்தேவையை சூரியசக்தியில் இருந்து தயாரிப்பதும் டெல்லி அரசாங்கத்தின் திட்டங்கள்.
'நெட் ஸீரோ' எனப்படும் கரியமில வாயு வெளியேற்றத்தைப் படிப்படியாக அறவே துடைத்தொழிக்கும் மத்திய அரசின் இலக்கை ஒட்டி டெல்லி அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருங்காலத்தில் இதற்கான நிதி ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியம் என்று டெல்லி அரசின் கலந்துரையாடல், மேம்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் ஜேஸ்மின் ஷா கூறினார். 'கிரீன் பாண்ட்ஸ்' எனப்படும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவு, அனைத்துலக நிதி ஆதரவு போன்றவற்றை அவர் சுட்டினார்.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் ஜேஸ்மின் ஷா இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அரசாங்கம் அதன் பசுமை முயற்சிகளுக்கு சொந்த நிதியை மட்டுமே தற்போது பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஈராண்டில் டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 12 விழுக்காடு மின்சார வாகனங்கள். இவற்றுக்காக நகரின் 2,500 இடங்களில் மின்னூட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் கணக்கிட்டால் இது ஆக அதிக எண்ணிக்கை என்றார் அவர். காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், டெல்லியில் அனல் மின்நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதையும் ஜேஸ்மின் ஷா சுட்டினார்.
உலகளவில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முன்னணி வகிப்பது குறித்துப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் 'நெட் ஸீரோ' நிலையை எட்ட இலக்கு கொண்டுள்ளது.

