25,000 கோடி முறை பார்க்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வுத் தகவல்கள்
புதுடெல்லி: கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டிக் குறிப்புகள், விழிப்புணர்வுத் தகவல்கள் ஆகியவை 25,000 கோடி முறை பார்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார, குடும்பநலத்துறை அமைச்சுகளில் பணியாற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகள் கிருமிப்பரவல் தொடர்பான நெறிமுறைகள், ஆலோசனைகள் போன்றவற்றைக் குறும்படங்களாக யூடியூபில் பதிவேற்றினர்.
உலகெங்கும் அரசாங்க விழிப்புணர்வுத் தகவல்கள் இவ்வளவு அதிகமாக பார்க்கப்பட்டது இதுவே முதல்முறை என்று இந்திய தகவல் பணி அதிகாரிகளுக்கு யூடியூப் பாராட்டு தெரிவித்துள்ளது.
நொய்டா அடுக்குமாடி இடிப்பு: ஆளில்லா வானூர்திகள் பறக்கத் தடை
நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், வரும் 28ஆம் தேதி இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கும் பணி நடப்பதால், அந்த வட்டாரத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதால் அந்தக் கட்டடத்தை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு 3,700 கிலோகிராம் வெடிபொருளைப் பயன்படுத்தி இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பிற்பகல் 2:15 முதல் 2:45 மணி வரை, அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை; 10 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை
தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ளது உம்பர்கண்ட் எனும் கிராமம். இங்குள்ள வீட்டில் சிறுத்தை ஒன்று புகுந்து ஓர் அறைக்குள் படுத்திருந்ததைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த அறையைப் பூட்டிய அம்மாது, காவல்துறைக்குத் தகவல் அளித்தார். வனத்துறையினரும் காவல்துறையினரும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி வெளியேற்ற முயன்றனர். ஆனால் இதற்கு 10 மணி நேரம் கடுமையாகப் போராட நேரிட்டது. பிடிபட்ட சிறுத்தை பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.
'வாட்ஸ்அப்' மோசடியில் ரூ.21 லட்சம் பறிகொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியை
மதனப்பள்ளி: ஆந்திரப் பிரதேச மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த வரலட்சுமி ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியை. 'வாட்ஸ்அப்' மூலம் அறிமுகற்றவரிடமிருந்து வந்த 'லிங்க்' ஒன்றைப் பயன்படுத்தியதால் இவருக்குப் பெருநட்டம் ஏற்பட்டுள்ளது.
இவரது வங்கிக் கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 21 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது. காவல்துறை விசாரணையில் பணப் பரிமாற்றத்துக்கு வரலட்சுமி ஒப்புதல் அளித்திருப்பதாக வங்கி தெரிவித்தது. இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

