ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை நீக்கும்படி ஆளுநரிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
திரு ஹேமந்த் சோரன் சென்ற ஆண்டு தமது முதல்வர் பதவியைப் பயன்படுத்தி நிலக்கரிச் சுரங்க உரிமம் பெற்றதாகக் குறைகூறப்படுகிறது. அவர் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகத் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார்செய்தது.
விசாரணையில் முதல்வர் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானதுடன் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும் தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் கேட்டிருந்தார். இந்நிலையில் ஆணையத்தின் பரிந்துரை வெளியாகி உள்ளது.
முன்னதாக, முதல்வரின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் மத்திய அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் இரண்டு ஏகே 47 துப்பாக்கிகளும் 60 தோட்டக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் ராஞ்சி காவல்துறை ஊழியர்கள் இருவரின் அலட்சியப் போக்கால் அவை அங்கிருந்ததாகத் தெரிந்தது. இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

