பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகுரு வட்டாரத்தில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது 'டெம்போ' எனப்படும் சிறிய ரக வாகனம் மோதியது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மாண்டோர் குடும்பத்துக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். அவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

