பீகார் அரசுப் பொறியாளர் வீட்டில் அள்ள அள்ளப் பணம்
பாட்னா: பீகார் அரசுப் பொறியாளர் ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்றுக் காலை அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், பணம் எதுவும் சிக்கவில்லை. விசாரணையில், சஞ்சய் என்ற அந்தப் பொறியாளர் தனது உதவிப் பொறியாளர் மற்றும் காசாளர் ஆகியோரிடம், தான் லஞ்சம் வாங்கிய பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் மூன்று கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நோட்டுகளையும் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க தங்க நகைகளையும் மற்றும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
பள்ளிக்குச் சென்ற மாணவியின் உடல் பைக்குள் கண்டெடுப்பு
புனே: காலையில் பள்ளிக்கு சென்ற 15 வயது மாணவி நேற்று மாலை வரை வீட்டுக்குத் திரும்பி வராத நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை அருகே பை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து வழிப்போக்கர் ஒருவர் தந்த தகவலின் அடிப்படையில் போலிசார் அங்கு சென்று அந்தப் பையைக் கைப்பற்றினர். அந்தப் பையைத் திறந்து பார்த்தால் காணாமல் போன மாணவியின் உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. கண்காணிப்புக் கருவிகளில் பதிவானவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களை மூட உத்தரவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆமாரம்பல்லம் கிராமத்தில் உள்ள வணிக கட்டிடத்தை மத வழிபாட்டுத் தலமாக மாற்ற அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து மதவழிபாட்டுத் தலம் அமைக்க அனுமதிக்கும்படி ஓர் அமைப்பு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்கள், வணிக கட்டடத்தில் மத வழிபாட்டுத் தலம் அமைக்க அனுமதிப்பது மத ரீதியிலான மோதலுக்கு வழிவகுக்கும் என வாதாடினர். அனைத்துத் தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வணிக கட்டடத்தை வழிபாட்டுத் தலமாக மாற்றுவதற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டார். மேலும், மாநிலத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் வழிபாட்டு தலங்கள், வழிபாட்டுக் கூடங்கள் அனைத்தையும் மூட மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

