அகமதாபாத்: குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் இரு கரைகளை இணைக்கும் வகையில் பிரம் மாண்டமாக கட்டப்பட்டுள்ள நடை பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இரண்டு நாள் பயணம் மேற் கொண்டு குஜராத் மாநிலத்துக்கு வந்த பிரதமர், அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
்நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், 7,500 பெண்கள் ராட்டையைச் சுழற்றி நூல் நுாற்றது புதிய சாதனையாகப் பதி வாகியுள்ளது.
பிரதமர் மோடியும் இந்நிகழ்வில் பங்கேற்று ராட்டையில் நூல் நூற்றார்.
இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, 984 அடி நீளமும் 45 அடி அகலமும் உள்ள நடைபாலத்தை அவர் திறந்து வைத்தார்.
எல்.இ.டி. விளக்குகளுடன் புதிய நடைபாலம் ஜொலித்தது. மக்கள் இயற்கையை ரசித்துக்கொண்டே இதில் நடந்து செல்லலாம். சைக்கிளில் செல்லும் வசதியும் உள்ளது. பாலத்தின் நடுவே பூங்கா அமைக் கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும் நடை பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, 'அடல்' என பெயரிடப்பட்டு உள்ளது.
மொத்தம், 26 லட்சம் கிலோ இரும்பு குழாய்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலத்தின் கூரையில், பல வண்ணத் துணிகள் மேற்கூரையாக அமைக்கப்பட்டு உள்ளன. சபர்மதியின் மேற்குப் பகுதியில் உள்ள மலர் பூங்காவையும் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ள கலை மற்றும் கலாசார மையத்தையும் இணைக்கும் வகையில் இந்த நடைபாலம் அமைந்துள்ளது.
பாலத்தை திறந்துவைத்துப் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 1996ல் குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகப்பெரிய சாதனையுடன் வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தை நேசித்த அவருக்கு குஜராத் மக்களின் சிறந்த மரியாதையாக இந்தப் பாலம் அமைந்து உள்ளது," என்றார்.
குஜராத் பயணத்தின்போது தனது தாயார் ஹீராபென்னையும் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
இதற்கிடையே நேற்று மாதாந்திர 'மன் கி பாத்' எனும் வானொலி நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய அவர், நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் முயற்சிகளில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாட்டின் சுதந்திர தினத்தின்போது 'ஹர்கர் திரங்கா' எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சியை புதுமையான முறையில் செயல்படுத்தியதற்காக தனது பாராட்டுகளை அவர் மக்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.

