புதுடெல்லி: நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் சோதனைக்காக உள்ளாடையை அகற்ற வைக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளி யாகியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 17ஆம் தேதி 'நீட்' எனும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வு, கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஆயூர் மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் நடைபெற்றது.
அப்போது அங்கு 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவிகளில் ஒருவரை 'மெட்டல் டிடெக்டர்' கொண்டு சோதனை நடத்தியபோது 'பீப்' ஒலி எழும்பியது.
இதனால், சந்தேகம் அடைந்த பெண் பாதுகாப்பு அதிகாரிகள், தேர்வு எழுத வேண்டுமானால், உள்ளாடையை அகற்றியாக வேண்டும் என மாணவியிடம் கூறினர். உள்ளாடையில் இருந்த உலோகக் கொக்கியால் 'மெட்டல் டிடெக்டர்' சத்தம் போட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. செய்வதறியாத மாணவி களின் உள்ளாடையை அகற்றிய நிலையில் மூன்று மணி நேரம் மிகுந்த மன உளைச்சலுடன் 'நீட்' தேர்வை எழுதி முடித்தனர்.
இதுபற்றிய தகவல்களை அந்த மாணவியின் தந்தை வெளியிட்டார். தன் மகளுக்கு மட்டுமல்லாமல் பல மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இது நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கேரள மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.பிந்து கடிதம் எழுதினார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கொட்டாரக்கரை காவல்துறை வழக்குப்பதிந்து, ஐந்து பெண்கள் உள்பட ஏழு பேரைக் கைது செய்தது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே 'நீட்' தேர்வை நடத்தும் 'என்.டி.ஏ' எனும் தேசிய தேர்வு முகமை, ஒரு குழு அமைத்து இந்த விவகாரத்தை விசாரித்தது. இதையடுத்து தற்போது பாதிப்புக்கு ஆளான மாணவி களுக்கு மறுதேர்வு நடத்த முடிவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிகிறது.

