புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும்படி தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாகத் திரு குலாம் நபி ஆசாத் (படம்) கூறியிருக்கிறார்.
"காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே கட்சி மேலிடத்துக்கும் எனக்கும் இடையே பிரச்சினை நிலவியது. யாரும் அவர்களுக்குக் கடிதம் எழுதுவதையோ கேள்வி எழுப்புவதையோ அவர்கள் எப்போதும் விரும்புவது இல்லை," என்றார் அவர்.
இதுவரை பலமுறை காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தபோதும் ஒரு முடிவுகூட எட்டப்படவில்லை என்பதைச் சுட்டிய திரு ஆசாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற கட்சியினர் தம்மைக் கட்டாயப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
மேலும், "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என் நண்பர்கள் சிலரே என்னைப் பற்றிக் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். காங்கிரசில் விரோதிகள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணையக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் தாம் அவ்வாறு செய்யப்போவதில்லை என்றும் இன்னும் 10 நாளில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிய திரு குலாம் நபி ஆசாத், இதன் தொடர்பில் கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் எட்டு காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு விலகிவிட்டனர். இவர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர். ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் வேளையில், திரு ஆசாத்துக்கான ஆதரவை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

