செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
8712eb15-9938-4853-9b97-fab804a034a1
-

அயோத்தி ராமர் கோயில்

அடுத்த ஆண்டு திறக்கப்படும்

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் கட்டப்படும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு பக்தர்களுக்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணியும் இடம்பெறுவதாகவும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து தற்போது 40 விழுக்காட்டுக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருப்பதாகவும் பீடம் அமைக்கும் பணி 80 விழுக்காடு நிறைவுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இடுக்கி நிலச்சரிவில் புதைந்த வீடு

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குடையாத்தூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது.

நீண்ட தேடலுக்குப் பிறகு நேற்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தென்மேற்குப் பருவமழையால் மலைக் கிராமங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக மாநில அரசு எச்சரித்திருந்தது.

பாடநூலில் சாவர்க்கர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 8ஆம் வகுப்புப் பாடநூலில் வி.டி.சாவர்க்கர் பற்றி இடம்பெற்றுள்ள கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

வி.டி.சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தது பற்றிய தகவலில் உண்மைக்குப் புறம்பான வகையில் மாணவர்களுக்கு வரலாற்றைத் திரித்துக் கூறியிருப்பதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பாடநூலில், "சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித்துவாரம் கூட இல்லை. ஆனால் அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்துசெல்வதுண்டு. சாவர்க்கர் அந்த புல்புல் பறவை மீதேறி ஒவ்வொருநாளும் தன் தாய்நாட்டைத் தரிசித்துவருவார்," என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தம்பதியைக் கொடூரமாகக் கொலை செய்த கொள்ளையர்கள்

திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் பாடூர் பள்ளி எனும் ஊரில் வசிக்கும் கிருஷ்ணாராவ், சுனிதா தம்பதியின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் நுழைந்தனர் கொள்ளையர்கள்.

அதிர்ச்சியடைந்த தம்பதி கூச்சலிடவே கொள்ளையர்கள் அவர்களைக் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொன்றதுடன் வீட்டில் இருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வழக்கம்போலப் பால் விற்பனை செய்ய வந்த மாது தந்த தகவலின் பேரில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

கொள்ளையர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

காதலை மறுத்த பள்ளி மாணவியை எரித்துக் கொன்ற இளையர்

தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா வட்டாரப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது காதலை ஏற்காததால் சினமுற்ற ஆடவர் அப்பெண்ணை எரித்துக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் ஷாருக் எனும் கட்டுமான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது சன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி அவர் கொளுத்தியதாகக் கூறப்பட்டது. தீக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் மூண்ட பரபரப்பை அடுத்து அந்த வட்டாரத்தில் நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.