புதுடெல்லி: துபாயில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர வீட்டைத் தனது இளைய மகன் ஆனந்துக்கு வாங்கியுள்ளார் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி.
'பாம் ஜுமைரா' எனும் பனைமர வடிவிலான செயற்கைத் தீவில் அமைந்திருக்கிறது இந்த மாளிகை.
கடற்கரை அருகே, 10 படுக்கையறைகள், வீட்டிற்குள்ளும் வெளியிலும் நீச்சல் குளங்கள் போன்ற வசதிகள் உடைய வீட்டை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அம்பானி வாங்கியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
புளூம்பெர்க் நிறுவனத்தின் 'பில்லியனர்' எனப்படும் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உலகளவில் 11வது இடத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி. இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 93 பில்லியன் டாலர். இந்தச் சொத்துகளின் வருங்கால வாரிசுகள் மூவரில் ஆக இளையவர் ஆனந்த்.
இவருக்கு வாங்கப்பட்ட வீடு அமைந்திருக்கும் 'பாம் ஜுமைரா' பகுதியில் இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான், காற்பந்து வீரர் டேவிட் பெக்கம் ஆகியோரும்கூட வீடு வாங்கியுள்ளனர்.
அம்பானி குடும்பத்தினரின் புதிய துபாய் மாளிகையை ரிலையன்ஸ் குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பராமரிக்கும் எனக் கூறப்படுகிறது. அவர்களின் முக்கிய வசிப்பிடம் என்றால் அது மும்பையில் இருக்கும் 27 மாடிகளைக் கொண்ட 'அன்ட்லியா' தான்.

