ஸ்ரீநகர்: துபாயில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வேளையில், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (என்ஐடி), விடுதி அறையில் மாணவர்கள் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கத் தடை விதித்துள்ளது. மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டி தொடர்பான கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பதிவிடவும் கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போட்டிகள் நடக்கும் நேரத்தில் மாணவர்கள் அவரவர் அறைகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே கருதவேண்டும் என்றும் அதன் தொடர்பில் ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் என்ஐடி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறும் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகளைப் பார்க்க நாடெங்கும் இளையர்கள் ஆர்வம்காட்டும் வேளையில் இந்த உத்தரவு வெளியானது.

