ஸ்ரீநகர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்த தலைவர்களில் ஒருவரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் (படம்) விலகியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக இம்மாதம் 26ஆம் தேதி திரு ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
கூடிய விரைவில் புதிய கட்சியைத் தொடங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வேளையில் திரு குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 64 முக்கியத் தலைவர்கள் தாங்களும் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு நேற்றுக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தவர்களில் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோகர் லால் சர்மா, சட்டமன்ற உறுப்பினர் பல்வான் சிங் போன்றோரும் அடங்குவர்.
ஐம்பதாண்டுக்கும் மேல் காங்கிரசில் இருந்த திரு ஆசாத்தும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாக விலகுவது கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் காந்தியை ஏகமனதாகத் தேர்ந்தெடுப்பதன் தொடர்பில் முயலும் வேளையில், ராகுல் அதை நிராகரித்து வருகிறார்.
ராகுல் மனம் மாறாவிட்டால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டைக் கட்சித் தலைவர் தேர்தலில் களமிறக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சோனியா, ராகுல் இருவர்மீதும் அதிருப்தி கொண்டுள்ள ஜி-23 தலைவர்களில் ஆசாத் உள்ளிட்ட மூவர் விலகிவிட்டதால் எஞ்சிய 20 பேரும் கெலாட்டை எதிர்த்து திரு சசி தரூரைக் களமிறக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசி தரூர் மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதாகத் தெரிகிறது.
அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடந்தால் 9,000 பேர் வாக்களிப்பர். அக்டோபர் 19ல் முடிவுகள் வெளியிடப்படும்.

