புதுடெல்லி: நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் சென்ற ஆண்டு சராசரியாக அன்றாடம் மூன்று பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் பதிவானதாக தேசிய குற்றப் பதிவுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் இரண்டு சம்பவங்களில் 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் துன்புறுத்தப்பட்டனர்.
இந்தியாவின் 19 பெருநகரங்களில் குற்றப் பதிவுகளைக் கணக்கிட்டதில் புதுடெல்லியில் ஆக அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாகத் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடைபெறும் பெருநகரமாக புதுடெல்லி வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இத்தகைய 13,892 குற்றச்செயல்கள் பதிவாயின. அதற்கு முந்தைய ஆண்டைவிட இந்த எண்ணிக்கை 40 விழுக்காட்டுக்கும் அதிகம்.
புதுடெல்லியில் சென்ற ஆண்டு பதிவான ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களில் 32.20 விழுக்காட்டுச் சம்பவங்கள் பெண்களுக்கு எதிரானவை என்று தகவல்கள் கூறுகின்றன.
பெண்கள் கடத்தப்படுதல், மானபங்கப்படுத்தப்படுதல், கணவனால் கொடுமைப்படுத்தப்படுதல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகள், வரதட்சணைக் கொடுமை தொடர்பான உயிரிழப்புகள் ஆகிய பிரிவுகளிலும் புதுடெல்லியில் ஆக அதிகக் குற்றச்செயல்கள் பதிவாயின.
பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருக்கும் பெருநகரங்கள் பட்டியலில் புதுடெல்லிக்கு அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது மும்பை. சென்ற ஆண்டு அங்கு 5,543 குற்றச் செயல்கள் பதிவாயின.
மூன்றாவது நிலையில் உள்ளது பெங்களூரு. அங்கு 2021ல் 3,127 குற்றச்செயல்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 19 பெருநகரங்களிலும் நடந்த ஒட்டுமொத்த இத்தகைய குற்றச்செயல்களில் மும்பையில் பதிவானவை 12.76 விழுக்காடு. பெங்களூரில் பதிவானவை 7.2 விழுக்காடு என்று தேசிய குற்றப் பதிவுகள் அலுவலகத் தகவல்கள் கூறின.

