செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f7020ff5-32a3-4f5f-810e-b077176e47dd
-

காணாமற்போன குழந்தை பாஜக உறுப்பினர் வீட்டில் கண்டுபிடிப்பு

மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஏழு மாதக் குழந்தை கடந்த வாரம் காணாமற்போனது.

குழந்தையைத் திருடியவரைக் கண்காணிப்புக் கேமராப் பதிவுகளின் உதவியுடன் காவல்துறையினர் தேடி வரும் நிலையில், மதுரா ரயில் நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபிரோசாபாத் எனும் பகுதியில் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த வினிதா அகர்வால், கிருஷ்ணா முராரி அகர்வால் தம்பதியின் வீட்டில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆண்குழந்தையைத் தத்தெடுக்க விரும்பி இரு மருத்துவர்களிடம் 1.8 லட்சம் ரூபாய் கொடுத்து குழந்தையை வாங்கியதாக அகர்வால் தம்பதி கூறியதையடுத்து அவர்களையும் குழந்தையை விற்ற மருத்துவர்களையும் உள்ளிட்ட மொத்தம் எட்டுப் பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலையில் கட்டியுடன் சாலையில் கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ரகுநாதபுரம் எனும் ஊரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுப் பார்த்த வழிப்போக்கர் அதிர்ச்சியடைந்தார்.

பிறந்து இரண்டு நாள்களே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று (படம்) அங்கு காணப்பட்டது. அதன் தலையில் மிகப் பெரிய கட்டி இருந்ததால் பெற்றோர் அதனை வீசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஹைதராபாத் மருத்துவமனைக்கு அனுப்பினர். கட்டியை அகற்றுவது குறித்து மருத்துவர் குழு ஆலோசித்து வருகிறது.

கேரளா, கர்நாடகாவில் கனமழை

எர்ணாகுளம்: தொடர்ந்து பெய்துவரும் கனத்த மழையால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது.

பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் 23 கிலோகிராம் தங்கம், 10 லட்ச ரூபாய் கொள்ளை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள நிதி நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் காலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்தது மர்ம கும்பல் ஒன்று.

நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்து, ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி ஓரிடத்தில் அமரவைத்துவிட்டு, அங்கிருந்து 23 கிலோகிராம் தங்கம், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விரைந்து தப்பியோடினர் கொள்ளைக்காரர்கள்.

கொள்ளைச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை தொடர்கிறது.