புதுடெல்லி: அமெரிக்கா சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் 'எஃப்-1' விசா பெறுவது அவசியம்.
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இத்தகைய விசாவைப் பெற்றுள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீன மாணவர்களைவிட இரு மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மொத்தம் 77,779 இந்திய மாணவர்களுக்கு 'எஃப்-1' விசா வழங்கப்பட்டுள்ளது. ஒப்புநோக்க இதே காலகட்டத்தில் 46,145 சீன மாணவர்கள் இந்த விசாவைப் பெற்றுள்ளனர்.
அமெரிக்கா வழங்கும் குடியேறிகள் அல்லாதோருக்கான விசா அறிக்கையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து 99,431 மாணவர்கள் 'எஃப்-1' விசாவில் அமெரிக்கா சென்று பயின்றனர். இந்தியாவிலிருந்து இத்தகைய விசா பெற்று படிக்கச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 87,258.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தைத் தவிர்த்து, வழக்கமாக அமெரிக்காவிற்கு படிக்கச் செல்வோரின் எண்ணிக்கைப் பட்டியலில் சீனா முதலிடம் வகித்துவந்துள்ளது. இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இந்தியா, தென்கொரியா ஆகியவை இருந்து வந்துள்ளன.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், கல்விக் கழகங்கள் ஆகியவற்றில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் அதற்கு முன்னர் 'எஃப்-1' விசா பெறுவது அவசியம். அனைத்துலக மாணவர்கள் செலுத்தும் கட்டணம் மூலமாக அமெரிக்கப் பொருளியல் பெரிதும் நன்மையடைகிறது. எடுத்துக்காட்டாக 2019ல் இதன் மூலம் அமெரிக்காவிற்கு 44 பில்லியன் டாலர் வருவாய் கிட்டியது.

