பணிப்பெண் கொடுமை தொடர்பில் பாஜக உறுப்பினர் கைது

பணிப்பெண் கொடுமை தொடர்பில் பாஜக உறுப்பினர் கைது

1 mins read
2c9435d9-d5bc-4d3a-93da-af5f517254da
-

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினர் சீமா பத்ரா தன் வீட்டில் வேலைசெய்த பழங்குடியினப் பணிப்பெண்ணைக் கொடூரமாக சித்திரவதை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்லா எனும் கிராமத்திலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சுனிதா எனும் பழங்குடியினப் பெண்ணை வேலைக்கு அழைத்துவந்தார் சீமா. தனது மகள் வத்சலாவின் டெல்லி வீட்டில் சுனிதாவை வேலைக்கு அமர்த்தினார். வத்சலா டெல்லியில் இருந்து வேறு ஊருக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டதால் சீமாவின் வீட்டிற்குத் திரும்பினார் சுனிதா.

அதுமுதல் சுனிதாவை சீமா மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும் சீமாவின் மகன் ஆயுஷ்மான் தகவல் அளித்ததைத் தொடர்ந்து சென்ற மாதம் 22ஆம் தேதி சுனிதா காவல்துறையினரால் மீட்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

விசாரணையில் சீமா சுனிதாவின் பற்களை இரும்புக் கம்பியால் உடைத்தது, சூடான பாத்திரங்களைக் கொண்டு உடலில் சூடு வைத்தது, கழிப்பறையை நாவால் சுத்தம் செய்யவைத்தது போன்ற விவரங்கள் தெரியவந்தன.

சீமா பத்ரா பாஜக தேசிய செயற்குழுவின் மகளிர் அணி உறுப்பினராக இருந்தார். பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய தகவல் வெளியானதும் அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். சீமாவின் கணவர் மகேஸ்வர் பத்ரா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.