செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1b2e1c5a-ce82-43c6-871a-825973d31edf
-

மகசேசே விருதைப் பெற மறுத்த கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் சைலஜாவுக்கு அறிவிக்கப்பட்ட மகசேசே விருதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். கேரளாவை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் சைலஜா. இந்நிலையில், தாம் ஆற்றிய பணிகள் பலவும் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் தனிப் பட்ட முறையில் தாம் மட்டும் விருது பெறுவது சரியாக இருக் காது என்றும் சைலஜா தெரிவித்துள்ளார். பிலிப்பீன்சில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர் ரமோன் மகசேசே என்பதாலும் அவரது பெயரால் வழங்கப்படும் விருது என்பதாலும்தான் சைலஜா இதை நிராகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சைரஸ் மிஸ்திரி விபத்தின்போது கார் இருக்கைவார் அணியவில்லை

மும்பை: சாலை விபத்தில் உயிரிழந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, காரில் உள்ள இருக்கைவாரை அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையின்போது அவர் பயணம் மேற்கொண்ட கார் அதிவேகமாகச் சென்றதும் ஒன்பது நிமிடங்களில் 20 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்ததும் தெரிய வந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். சைரஸ் மிஸ்திரி உட்பட அந்த காரில் இருந்த யாரும் இருக்கைவார் அணியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளம் எம்எல்ஏ, மேயருக்கு திருமணம்

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆக இளம் எம்எல்ஏவான சச்சின் தேவுக்கும் (28 வயது), இளம் மேயரான 22 வயது ஆர்யாவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. ஆர்யா திருவனந்தபுரம் மேயராக உள்ளார். கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோதே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.