புதுடெல்லி: இந்தியாவும் பங்ளாதேஷும் விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்படிக்கை தொடர்பில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்க இணங்கியுள்ளன.
பங்ளாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின்போது நேற்று இவ்வாறு இணக்கம் காணப்பட்டது. இருதரப்பு வர்த்தக, எரிசக்தித் தொடர்புகளை வலுப்படுத்துவது நோக்கம்.
பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்தனர்.
இந்தியப் பிரதமராகத் திரு நரேந்திர மோடி இருக்கும்வரை இருதரப்புக்கும் இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது எளிது என்றார் திருவாட்டி ஹசீனா,
குஷியாரா நதி நீரின் பங்கீடு தொடர்பில் இரு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டதை அடுத்து பங்ளாதேஷ் பிரதமர் இவ்வாறு கூறினார்.
இருதரப்புக்கும் இடையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. முன்னதாக 1996ஆம் ஆண்டு கங்கை நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரு பிரதமர்களின் சந்திப்பில் மொத்தம் ஏழு உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, திருவாட்டி ஹசீனா புதுடெல்லிக்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பங்ளாதேஷ் சுதந்திரப் போரின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அவர் உதவித்தொகை வழங்கினார். அந்தப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறிய அவர், "பங்ளாதேஷின் விடுதலை, இறையாண்மை ஆகியவற்றுக்காக உயிர்த் தியாகம் செய்த இந்திய சகோதரர்களை நினைவுகூர்வது எங்களுக்கு கௌரவம்," என்று கூறினார்.
பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் பெயரில் வழங்கப்படும் உதவித்தொகையை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இணைந்து திருவாட்டி ஹசீனா மாணவர்களுக்கு வழங்கினார்.
முன்னதாக இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் அவர் சந்தித்துப் பேசினார். அதிபர் மாளிகையில் அவருக்குப் பாரம்பரிய முறையிலான முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

