தமிழ்நாடு: கடையநல்லூர்: தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலாப்பேரி குளம் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிர் இழந்துள்ளார்.
சிவகிரி அம்பேத்கர் தெருவை சேர்ந்த 19 வயது சின்னராசு நேற்று காலை கடையநல்லூர் அருகே உள்ள சாலாப்பேரி குளத்தில் அரசிடம் முறையாக அனுமதி பெற்று டிராக்டரில் குளத்து மண் அள்ளிக்கொண்டு வந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு டிராக்டருக்கு வழி விடும்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக சின்னராசுவின் டிராக்டர் வயல்வெளியில் கவிழ்ந்தது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கிக்கொண்ட சின்னராசு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சின்னராசு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.