புதுடெல்லி: நாடு முழுவதும் அரசியல் கட்சிகளைத் தொடங்கி ஒரு தரப்பினர் நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்திருப்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து அத்தகைய கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நன்கொடைக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் இத்தகைய கட்சிகளுக்கும் சில அமைப்புகளுக்கும் நன்கொடை அளிப்பவர்களும் வருமான வரி செலுத்த வேண்டாம்.
அதனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்துள்ளது. அண்மைய தகவலின்படி நாடு முழுவதும் 2,796 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவரை 55 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பல கட்சிகளுக்கு அலுவலகமே இல்லை.
இதன் பின்னணியில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஹவாலா கும்பல் இருப்பதாக வருமான வரித்துறை நம்புகிறது.
ஹவாலா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் பணத்துக்கும் தொடர்பு உள்ளதால் மத்திய அமலாக்கத் துறையினரும் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹவாலா பணத்தை கையாள்வதற்காக அரசியல் கட்சிகளைத் தொடங்கும் இந்தக் கும்பல், அக்கட்சிகளை நிர்வகிப்பவர்களுக்கு கணிசமான தொகையை அளிப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அண்மையில் பல்வேறு மாநிலங்களில் பதிவாகி உள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுடன் தொடர்புள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
அப்போது கிடைத்த வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், தகவல்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து 198 அமைப்புகளை தேர்தல் ஆணையம் அண்மையில் நீக்கியது.
தேர்தல் ஆணைய விதிகள், தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறுவதாக 2,174 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன. அக்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இக்கட்சிகள் இதுவரை ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக வசூலித்துள்ளதாக வருமான விரித்துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.