புதுடெல்லி: இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பொற்காலம் இது என மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாயாக இந்தியா உள்ளது என்றார்.
இதை நினைத்து இந்தியர்கள் பெருமைகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
"ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டிற்கான இந்தியாவின் பயணத்தின் ஒரு பகுதியாக நீங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரையும் அழைக்கிறேன். இந்தியாவில் தயாரான பொருள்கள், இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகள், கலைப்பொருள்கள், காதி பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுக்க அனைவரையும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்," என்று அமைச்சர் பியூஷ் கோயல் மேலும் கூறினார்.

