புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள போர் விமானங்களை மேம்படுத்த அமெரிக்கா நிதியுதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்காவிடம் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
'எஃப்-16' ரக போர் விமானங்கள் மிக நவீனமானவையாகும். அமெரிக்க ராணுவத்துக்குப் பலம் சேர்க்கும் போர் விமானங்களில் இதுவும் ஒன்று.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ள அதி நவீன 'எஃப்-16' போர் விமானங்களை மேம்படுத்த ரூ.3,500 கோடி வழங்குகிறது அமெரிக்கா. இதனால் இந்தியா மட்டுமல்லாமல் ஆசிய நாடுகள் பலவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, பாகிஸ்தான் இந்தியாவைக் குறிவைக்க ஏதுவாக அமையும் என்று இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், போர் விமான பராமரிப்புக்கான சேவை மட்டுமே வழங்கப்படுவதாகவும் புதிய ராணுவத் தொழில்நுட்பங்கள், ஏவுகணைகள் ஆகியவை பாகிஸ்தானுக்கு வழங்கப்படவில்லை என்றும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் உதவுவதாகவும் கூறியுள்ளது.
எனினும் அமெரிக்கா தற்போது அளிக்கும் தொகையைக் கொண்டு பாகிஸ்தானால் மூன்று ரஃபேல் விமானங்களை வாங்க முடியும் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்த உதவியைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் தொகை மிக அதிகம் என்றும் இந்தியா சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், தெற்கு-மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூவிடம் இந்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்தப் புதிய முடிவின் பின்னணியில் உள்ள நோக்கத்தை ஏற்க இயலாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இதன் மூலம் ரஷ்யாவுக்குப் பொருளியல் நெருக்கடியை ஏற்படுத்த முனைகின்றன.
ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா நேரடியாக ஆதரவு வழங்கவில்லை. இதையடுத்தே இந்தியாவுக்கு வேறு வகையில் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியிலான உதவிகளை அமெரிக்கா செய்வதாகக் கூறப்படுகிறது.
போர் விமானங்களை மேம்படுத்த ரூ.3,500 கோடி வழங்குகிறது எனத் தகவல்

