கேரளாவில் ஒரே வாரத்தில் ரூ.624 கோடிக்கு விற்றுத்தீர்ந்த மது வகைகள்
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஒரே வாரத்தில் ரூ.624 கோடிக்கு மது வகைகள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஒரு வாரத்தில் ரூ.529 கோடிக்கு மது விற்பனையானது. இந்த ஆண்டு மது விற்பனை மூலம் கூடுதலாக ரூ.95 கோடி கிடைத்துள்ளது. வெப்கோ என்ற சில்லறை விற்பனைக் கடையில் வெளிநாட்டு மதுபானங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.1.06 கோடி மதிப்புள்ள மது வகைகள் விற்றுத் தீர்ந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி லட்டு: சீனி அளவைக் குறைக்க பக்தர் கோரிக்கை
திருமலை: திருப்பதி கோவிலில் விநியோகிக்கப்படும் லட்டுவில் சீனி அதிகமாக இருப்பதாகவும் இதனால் நீரிழிவு நோயாளிகள் அதை சாப்பிட முடியவில்லை என்றும் ஆந்திராவைச் சேர்ந்த தசரத ராமய்யா தெரிவித்துள்ளார். கோவில் நிர்வாகம் நடத்திய குறை கேட்புக் கூட்டத்தின்போது நீரிழிவு நோயாளிகளுக்கென சீனி குறைவாக உள்ள லட்டுகளை விநியோகிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.140 கோடி வசூலாகி உள்ளது.
'பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடம் என்பதே இருக்கக்கூடாது'
புதுடெல்லி: இந்த உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான இடம் என்பது இருக்கக் கூடாது என்றும் இதை ஐநா மன்ற உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மும்பை தாஜ் தங்குவிடுதியின் பொது மேலாளராகப் பணியாற்றிய கரம்பீர் கங் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் முதல் மாநாடு ஐநா மன்ற ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர், மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது தன் மனைவி, மகன்களை இழந்துவிட்டதாக உருக்கத்துடன் குறிப்பிட்டார். "பயங்கரவாதத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக சேதமடைந்த தாஜ் தங்குவிடுதியை வெறும் 21 நாள்களிலேயே சீராக்கினோம். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்த்து செயல்பட்டோம். எங்களுக்கு உலக அளவில் பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், 14 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. உலக நாடுகள் நீதியை நிலைநாட்ட இணைந்தே செயல்பட வேண்டும்," என்றார் கரம்பீர் கங்.
குலாம் நபி ஆசாத்: பத்து நாள்களில் கட்சிப்பெயர் அறிவிக்கப்படும்
ஸ்ரீநகர்: அடுத்து பத்து தினங்களுக்குள் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தமக்கு இருந்த ஆதரவைக்காட்டிலும், தற்போது நான்கு மடங்கு ஆதரவு கிடைத்து வருவதாக குறிப்பிட்டார். தமது கட்சிப் பெயரில் உருது, சமசுகிருத மொழிகளில் வார்த்தைகள் இடம்பெறாது என்று தெரிவித்த அவர், மக்கள் அனைவருக்கும் புரியும்படியான இந்திய பெயராக அது இருக்கும் என்றார்.

