கோல்கத்தா: கைபேசி செயலி மூலம் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி, கோடிக்கணக்கில் பண மோசடி செய்த தொழிலதிபரும் அவரது மகனும் மேற்கு வங்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
'இ-நக்கட்ஸ்' என்ற பெயரில் எளிய புதிர் விளையாட்டு ஒன்று அண்மையில் அறிமுகமானது. கைபேசி செயலி மூலம் இந்த விளையாட்டை ஆட வேண்டும். இதற்காக 'இ-நக்கட்ஸ்' செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
புதிர்ப் போட்டியில் பங்கேற்க, குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தைவிட அதிக தொகை கிடைக்கும்.
ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை என்றும் இது மோசடி விளையாட்டு என்றும் மேற்கு வங்க காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. புதிர்ப் போட்டியில் வெற்றி பெறுபவர்களின் கணக்கில் பணம் செலுத்தும் 'இ-நக்கட்ஸ்' நிறுவனம், உடனுக்குடன் ஒரு குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளது.
அதில், குறிப்பிட்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இருமடங்கு அதிக தொகை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூடுதல் பணத்துக்காக ஆசைப்பட்ட பலரும் அந்த நிறுவனத்தில் இணையம் வழி முதலீடு செய்தனர். ஆனால், அந்தப் பணத்தை அவர்களால் திரும்பப் பெற முடியவில்லை.
காவல்துறை விசாரணையில், கோல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் அகமது கானின் மகன் அமீர் கான்தான் 'இ-நக்கட்ஸ்' செயலியை உருவாக்கி உள்ளார் என்பதும் பண மோசடியில் ஈடுபட்டார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவருக்கும் தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

