நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர் ஒருவர் எடுத்துகொண்ட முயற்சி பலருடைய உள்ளங்களை கவர்ந்து வருகிறது.
பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார் டாக்டர் கோவிந்த் நந்தகுமார். ஆகஸ்ட் 30 அன்று அவர் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கம்போல் வீட்டைவிட்டு கிளம்பும் நேரத்தில் அவர் கிளம்பியுள்ளார்.
தினந்தோறும் செல்லும் வழியில் தனது வாகனத்தில் அவர் பயணத்தை தொடங்கினார். அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அவருக்காக மருத்துவ குழு காத்திருந்தது. மருத்துவமனையை அவர் சென்றடைந்ததும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளபடயிருந்தது.
ஆனால் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்னும் தாமதம் ஏற்பட்டால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என டாக்டர் கோவிந்த் உணர்ந்தார். உடனே, வாகனத்திலிருந்து இறங்கி ஓடத் தொடங்கினார். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடினார்.
"வாகனத்தில் ஓட்டுநர் இருந்ததால் அதிலிருந்து இறங்கி ஓட நான் தயங்கவில்லை. அந்த சமயத்தில் என் நோயாளியின் உயிர்தான் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது," என்றார் டாக்டர் கோவிந்த்.
மருத்துவமனை சென்றடைந்ததும் உடைகளை மாற்றிகொண்டு அறுவை சிகிச்சையை தொடங்கினார். சிகிச்சை நல்ல முறையில் நடந்தது. நோயாளி உடல்நலத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது.
மருத்துவம் என்பது தொழில் அல்ல; அது ஒரு சேவை என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார் டாக்டர் கோவிந்த்.
கடந்த சில வாரங்களாக கனத்த மழையால் பெங்களூரு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

