வலதுசாரி, மதத் தலைவர்களை தாக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை
அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலைச் சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய, மாநில அரசுகளை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் 'இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் பிரதேசம்' (ஐஎஸ்கேபி) என்ற பயங்கரவாத அமைப்பு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள வலதுசாரி தலைவர்களைத் தாக்குவதற்கு பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாகவும் பில்கிஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவித்ததை எதிர்த்து பயங்கரவாதிகள் இந்தச் சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அம்மாநிலத்தில் நிலவும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதே பயங்கரவாத அமைப்புகளின் திட்டம் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வலதுசாரி அமைப்புகள், மதத் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் ஐஎஸ்கேபி, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவது அதிகரித்து வருவதாகவும் அத்தகைய ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்திய இளையர்களை அணி திரட்டி, உள்நாட்டிலேயே போராளிக் குழுக்களை உருவாக்க ஐஎஸ்கேபி பயங்கரவாத அமைப்பு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இப்புதிய போராளிக் குழுக்களை வைத்து குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும் தேர்தல் நடைபெறும் போதும் பெரும் தாக்குதலை நடத்துவதே பயங்கரவாத அமைப்புகளின் திட்டம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, குஜராத் மட்டுமல்லாமல், அதன் அண்டை மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய தலைவர்களை தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைப் பிரிவால் கைது செய்யப்பட்டார். அவரிடம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

