சண்டிகர்: வட மாநிலங்களில் குண்டர் கும்பல்கள், கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அண்மைக்காலமாக குண்டர் கும்பல்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கூலிப்படையினரின் செயல்பாடு காரணமாக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டார். இதற்கு உள்ளூர் குண்டர் கும்பல்களுக்கு இடையே நிலவிய போட்டிதான் காரணம் என்று கூறப்படு கிறது.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையின்போது குண்டர் கும்பல்களும் கூலிப்படையினரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானது. மேலும், பாடகர் சித்து மூசேவாலா கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள், இந்தி நடிகர் சல்மான்கானையும் தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டியிருந்த பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.
இதையடுத்து வட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சித்து மூஸ்வாலா படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைதாகி உள்ளனர். இவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

