பெங்களூரு: அறுவை சிகிச்சைக்காக நோயாளி காத்திருந்த நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர், மூன்று கிலோ மீட்டர் தூரம் ஓடி மருத்துவமனையைச் சென்றடைந்தார்.
பின்னர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
பெங்களூரைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணரான கோவிந்த் நந்தகுமார் (படம்), நேற்று முன்தினம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
நோயாளி ஒருவருக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக, மருத்துவமனையைச் சென்றடைய 45 நிமிடங்கள் ஆகும் என்பதைக் கணித்த கோவிந்த், தனது காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு, மருத்துவமனையை நோக்கி ஓடத் தொடங்கினார்.
சில நிமிடங்களில் அங்கு சென்றடைந்த அவர், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்ததாகவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தது தமக்கு சோர்வை ஏற்படுத்தவில்லை என்றும் மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் தெரிவித்தார்.

