பாட்னா: பீகார்் மாநிலத்தில் உள்ள எல்.என்.பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய தேர்வையொட்டி வழங்கப்பட்ட தேர்வு அறை (ஹால் டிக்கெட்) நுழைவுச்சீட்டில் பிரதமர் மோடி, அம்மாநில ஆளுநர் பாகு சவுகான், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரின் படங்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் இப்பல்கலைக்கழக நிர்வாகம் பிஏ இளங்கலைப் படிப்புக்கான தேர்வை நடத்தியது. இதற்காக வழங்கப்பட்ட தேர்வு அறை நுழைவுச் சீட்டில் பிரதமர் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்த தகவலும் நுழைவுச் சீட்டும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. இது தவறான நடைமுறை என ஒரு தரப்பினர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் நுழைவுச்சீட்டில் படங்களைச் சேர்க்கவில்லை என அதன் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
"இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் கூறிஉள்ளார்.

