கொழும்பு: இலங்கையில் நடப்பு ஆண்டில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 700,000 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கடப்பிதழ்களை வழங்கியதில்லை என அந்நாட்டின் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையில் 658,725 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டதாக அத்துறையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில் 171,168 கடப்பிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அது தற்போது 312 விழுக்காடு அதிகரித்து 705,412 ஆக உள்ளது. இலங்கையில் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு கடப்பிதழ் வழங்கப்பட்டதில்லை என்கிறது அந்நாட்டின் குடிநுழைவுத்துறை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 28,976 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் அந்த எண்ணிக்கை தற்போது 297 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அத்துறை தெரிவித்தது.
நடப்பாண்டில் மாதந்தோறும் சராசரியாக 88,170 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் சுமார் நான்காயிரம் பேர் கடப்பிதழுக்கு விண்ணப்பித்ததாக குடிநுழைவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

