ஜெனிவா: ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு ஆக்கபூர்வமான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என இந்தியா சாடியுள்ளது.
இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு உரிய அரசியல் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு என ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்தியா தனது கருத்தைப் பதிவு செய்தது.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் 51வது அமர்வில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தமானது அதிகாரப் பகிர்வுக்குரியது என்றும் அதன்படி மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு, மாகாண சபைக்குத் தேர்தல் என்பவை முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டினார்.
இவை அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் என்றும் இலங்கை அரசு இதனை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மாகாணங்களுக்கு சுயாட்சி, தமிழர்களுக்கு அதிக அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. ஆகையால் இந்த விவகாரத்தில் இலங்கை அரசு உடனடியான, நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
"ஈழத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம், கண்ணியத்தை உறுதிசெய்ய ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்பிற்குள் ஓர் அரசியல் தீர்வை உருவாக்கித்தர வேண்டும்," என்றார் இந்திராமணி பாண்டே.
இலங்கையின் மாகாண சபைகளுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இத்தகைய தேர்தல்கள் மூலம் இலங்கை மக்கள் தங்களது எதிர்காலத்தை தேர்வு செய்ய முடியும் என்றார்.
ஆகையால்தான் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நீதி, சம உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தமது உரையில் குறிப்பிட்டார்.

