ப.சிதம்பரம்: உணவுப் பொருள் பணவீக்கம் 7.62%ஆக அதிகரிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 விழுக்காடாக உயர்ந்துள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புக்கும் மேல் பதிவாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார். "இப்போதுகூட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது," என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
லடாக் எல்லையில் உள்ள படைகளை திரும்பப்பெற்ற இந்தியா, சீனா
ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் இருந்து இந்தியா, சீனா படைகள் திட்டமிட்டபடி பின்வாங்கி உள்ளதாக இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இருநாட்டு படைகளையும் எல்லையில் இருந்து திரும்ப பெறும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்றார். படை விலக்கல் நடைமுறைகளை கடந்த 12ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
491 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்த 'வந்தே பாரத்' ரயில்
மும்பை: 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் அகமதாபாத், மும்பை இடையேயான வழித்தடத்தில் இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 491 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது 'வந்தே பாரத்' ரயில். சோதனையின்போது இந்த ரயில் 52 விநாடிகளில் நூறு கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப்பிடித்தது.
ஷிண்டே: மோடி, அமித்ஷாவுக்கு முகவராக இருப்பதே சிறந்தது
மும்பை: மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேனனுக்கு முகவராக இருப்பதைவிட பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவுக்கு முகவராக இருப்பது சிறந்த செயல் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். யாகூப் மேனன் கல்லறை உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது அலங்கரிக்கப்பட்டதாகவும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
முப்படைகள் இணைப்பு: அரசு தகவல்
புதுடெல்லி: முப்படைகளின் இணைப்பை நோக்கி நாடு வேகமாக நடைபோட்டு வருவதாக தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். முப்படைகளுக்கும் பொதுவான தளவாட மையம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அப்போதுதான் ஒரு படையின் வளங்கள், எவ்வித இடையூறும் இன்றி மற்ற படைகளுக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

