ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி

3 mins read
2f9f506c-899f-4fc3-808b-d04f44564f19
பிரசவம் பார்த்த பெண் மருத்துவ மாணவி (வலது) படம்: தமிழக ஊடகம் -

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து அவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்க உதவி புரிந்துள்ளார் மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவர்.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை புறப்பட்டது. அதில் ஏசி வண்டியில் ஐதராபாத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர் ஒருவர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் பயணம் செய்தார்.

விஜயவாடா-விசாகப்பட்டினம் இடையே அதிகாலை 5.35 மணிக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று திகைத்து உதவி செய்ய முடியாமல் தவித்தனர். அதிர்ஷ்டவசமாக அதே பெட்டியில் குண்டூர் மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்த 4-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி சுவாதி என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் கர்ப்பிணி பெண்ணுக்கு முதலுதவி அளிக்கத் தொடங்கினார். விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே நிறுத்தங்கள் எதுவும் இல்லாததால் கர்ப்பிணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவ மாணவி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

மற்ற பயணிகளும் அவருக்கு உதவ முன்வந்தனர். ரயிலில் ஒரு பகுதியை போர்வை மற்றும் துணியைக் கொண்டு மூடி பிரசவ அறை போல மாற்றினர்.

சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த சம்பவம் ரெயிலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி தன்னிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு கர்ப்பிணிக்கு மேலும் முதல் உதவிகளை அளித்தார்.

பிறந்த குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயணம் செய்தது ஏசி பெட்டி என்பதால் குழந்தை குளிரில் நடுங்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மற்ற பயணிகள் தங்களது போர்வைகளை கொடுத்து குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க உதவி செய்தனர்.

ரயில் அனக்கா பள்ளி நிலையத்திற்கு வந்ததும் 108 ஆம்புலன்ஸ் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் தாய் மற்றும் குழந்தையை எடுத்துச் சென்று மருத்துவ மாணவி அங்குள்ள என்டிஆர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

"கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனையை தொடர்பு கொள்ள முடிவு செய்தோம். ஆனால் இடையில் எவ்வித நிறுத்தங்களும் இல்லாததால் அது முடியவில்லை. எனவே நானே பிரசவம் பார்க்க முடிவு செய்தேன். இது நான் சொந்தமாக செய்த முதல் பிரசவம் என்பதால் மிகவும் கவலைப்பட்டேன். மேலும் எனக்கு பயமும் ஏற்பட்டது. நான் முன்பு ருத்துவமனையில் உதவி பேராசிரியர்களிடம் பயிற்சி பெற்றுள்ளேன். அதன்படி செயல்பட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நஞ்சுக்கொடி 45 நிமிடங்களுக்கு வெளியே வரவில்லை. அதனால் எனக்கு கவலை ஏற்பட்டது. குழந்தை வெளியே வந்ததும் எனக்கு நிம்மதியாக இருந்தது. இந்த பிரசவத்திற்கு அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் உதவி செய்தனர். இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது," என்று மாணவி கூறினார்.