ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 14 தமிழக கட்சிகளும் முடங்கின
புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆறு ஆண்டுகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் அந்த ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் இதுவரை 2,796 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பெயரைப் பதிவு செய்துள்ளன. எனினும் இவற்றுள் பெரும்பாலான கட்சிகள் இன்னும் அந்த ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில், அங்கீகாரம் பெறாத 86 அரசியல் கட்சிகளை தன் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 623 கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பல்வேறு கட்சிகள் செயலற்ற நிலையில்தான் உள்ளன என்பதும் கறுப்புப் பணப் பரிமாற்றத்துக்கு உதவி செய்வதும் சிபிஐ, தேசியப் புலனாய்வு முகமை விசாரணையின் மூலம் தெரியவந்தது.
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த சலுகையைப் பயன்படுத்தி பல கட்சிகள் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எழுந்துள்ள புகார்களை அடுத்து, உரிய விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்சிகளைப் பதிவு செய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளைத் தனது பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள விவரங்களின்படி அக்கட்சிகளின் அலுவலக முகவரிக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தபோது, அங்கு அக்கட்சிகள் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து சுமார் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக நாடு முழுவதும் 253 அரசியல் கட்சிகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 14 கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் செயல்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது முடக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இதுவரை பயன்படுத்திய சின்னங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் அண்மைய நடவடிக்கைகள் மூலம் 339 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் கணக்கிடும்போது தேர்தல் ஆணையம் 537 கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

