ஸ்ரீநகர்: சிறிய ரகப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் மாண்டனர். இத்துயரச் சம்பவம் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 36 பயணிகளுடன் அந்தப் பேருந்து பூஞ்ச் மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எல்லைப் பகுதி அருகே உள்ள பிராரி நல்லா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவம், காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் உதவியோடு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திலேயே ஒன்பது பேர் பலியாகிவிட்ட நிலையில் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை காவல்துறையினரும் குடிமை அதிகாரிகளும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

