பெங்களூரு: இந்தி மொழி தினக் கொண்டாட்டங்களுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகாவில் கன்னட மொழிக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அங்குள்ள சில அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி மொழி நாளாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நேற்று இந்தி மொழி நாள் அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் உள்ளூர் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், "கர்நாடகாவில் கன்னட மொழியைக் கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு, இந்தி மொழி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது," என்று முன்னாள் முதல்வருமான குமாரசாமி திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்ப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எளிமை, தன்னிச்சையான தன்மை, உணர்வுத்திறன் ஆகியவற்றின் மூலம் இந்தி எப்போதுமே மக்களைக் கவரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஆக அதிகமாகப் பேசப்படும் ஒரு மொழியை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாக அவர் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.

