கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய பேரணியின்போது காவல்துறை அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜகவினர் கடுமையாகத் தாக்கும் காணொளிப் பதிவுகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாநிலத் தலைநகரான கோல்கத்தாவில் பிரம்மாண்டப் பேரணி நடைபெறும் என பாஜக அறிவித்திருந்தது.
இதையடுத்து பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பாஜகவினர் கோல்கத்தாவில் திரண்டனர். அதேசமயம் பிற ஊர்களில் இருந்து பேரணியில் பங்கேற்க வந்தவர்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியதாகப் புகார்கள் எழுந்தன.
இதனால் ராணிகஞ்ச், போல்பூர், துர்காப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது காவல்துறையினர் பாஜகவினரால் தாக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். கோல்கத்தா எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சர்வாதிகாரப் போக்கைக் கையாள்வது உறுதியாவதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சாடினார்.
இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் கோல்கத்தா நகரின் ஒரு பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது என்றும் மோதலின்போது ஒரு புறம் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மறுபுறம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
கோல்கத்தாவில் பதற்ற நிலை நீடிப்பதாகவும் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

