ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்
புதுடெல்லி: உக்ரேன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான ரஷ்யாவின் போரால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் போரை தவிர்க்கும் நடவடிக்கையாக, ரஷ்யாவுக்கு எதிராக பொருளியல் தடைகளை விதித்து உள்ளன. இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகளுக்கு தனது எரிவாயு விநியோகத்தில் சுணக்கம் காட்டி வருகிறது.
இதேபோன்று ரஷ்யா, எங்களது மிக பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது என்றும் அதன்வழியே போதிய வர்த்தகம் நடைபெறும் என்றும் கூறியிருந்தது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பற்றிய கேள்விக்கு இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், அதன் தடையின் எதிரொலியாக புதிய சந்தைகளை ரஷ்யா எதிர்பார்க்கிறது. ஒரு நுகர்வோராக, இந்தியா மிகக் குறைந்த விலையிலான சலுகைகளை இயல்பாகவே எதிர்பார்க்கிறது. இந்தத் துறையில் இந்தியாவுடனான எங்களுடைய நல்லுறவைத் தொடர்ந்து விரிவாக்கவே முயற்சி செய்கிறோம்.
"பொருளியல் ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அடிப்படையில், தொடர்ந்து நடந்து வரும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவித்து இருதரப்புக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தி வலுவாக்கி வருகிறோம். ரஷ்யா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சக்திகள், முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தனித்துவத்துடன் இருப்பதற்காகவும் உலக பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகளைவிட சிறந்த முறையில் முன்னேறத் தொடங்கியுள்ளன," என அவர் கூறியுள்ளார்.


