புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானின் சமர்காண்ட் நகரில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
சமா்கண்ட் நகரில் நேற்று 15ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, இன்று வரை நடைபெறும்.
அந்த மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்திய, சீன எல்லையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த மோதலுக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு சீன, இந்திய வீரர்கள் சர்ச்சைக்குரிய எல்லையில் இருந்து பின்வாங்கிய நிகழ்வு நடந்துள்ளது. அதுவரை இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. எல்லை மோதலுக்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களும் இப்போதுதான் நேருக்குநேர் பார்த்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த மாநாட்டின்போது சீன, இந்திய தலைவர்கள் சந்தித்துப் பேசுவார்களா என்பது குறித்து இரு நாட்டு தரப்பிலும் உறுதிசெய்யப்படவில்லை. ரஷ்யா அதிபர் புட்டினும் மோடியும் சந்திப்பது குறித்து ரஷ்யா ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், ரஷ்யாவின் உரவிற்பனை மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உணவு விநியோகம் ஆகியவை குறித்து பேசுவர் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினே மோகன் குவாத்ரா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் வர்த்தகம், வட்டாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை, தீவிரவாதம் போன்றவை குறித்து தலைவர்கள் விவாதிப்பர் என்றார்.
பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு' என்பது சீனா, இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்டதாகும்.

