மும்பை: ரகசிய பெட்டகங்களில் இருந்து 431 கிலோ தங்கம், வெள்ளி சிக்கின

மும்பை: ரகசிய பெட்டகங்களில் இருந்து 431 கிலோ தங்கம், வெள்ளி சிக்கின

1 mins read
cdebb82a-e328-4acc-a444-a2666012c005
-

மும்பை: பண மோசடி வழக்கு தொடர்­பாக மும்­பை­யைச் சேர்ந்த இரு நிறு­வ­னங்­களில் நேற்று சோத­னை­யில் ஈடு­பட்ட அம­லாக்­கத் துறை 431 கிலோ தங்­கம் மற்­றும் வெள்­ளியை கைப்­பற்­றி­யுள்­ளது. இவற்­றின் மதிப்பு ரூ.47.76 கோடி என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மும்­பை­யைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்ட பரேக் அலு­மி­னக்ஸ் நிறு­வ­னம், பல்­வேறு வங்­கி­க­ளி­ட­மி­ருந்து ரூ.2,300 கோடி கடன் பெற்று மோச­டி­யில் ஈடு­பட்­டது.

இந்­நி­று­வ­னம் மீது 2018ஆம் ஆண்டு வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது. சிபிஐ மற்­றும் அம­லாக்­கத் துறை இம்­மோ­சடி தொடர்­பாக விசா­ரணை நடத்தி வரு­கின்­றன.

இந்த வழக்­குத் தொடர்­பாக மும்பை ரக்‌ஷா புல்­லி­யன் மற்­றும் கிளா­சிக் மார்­பிள் ஆகிய இரு நிறு­வ­னங்­க­ளுக்­குச் சொந்­த­மான இடங்­களில் நேற்று அம­லாக்­கத் துறை சோத­னை­யில் ஈடு­பட்­டது.

அப்­போது ரக்‌ஷா நிறு­வ­னத்­தில் சில சாவி­கள் கிடைத்­தன. அந்த சாவி­கள் குறித்து விசா­ரித்­த­போது அது தனி­யார் வங்­கிப்­பெட்­ட­கங்­க­ளுக்­கான சாவி­கள் என்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து அந்த வங்கிப் பெட்டகங்கள் இருக்­கும் இடத்­துக்­குச் சென்ற அம­லாக்­கத் துறை அந்­தச் சாவி­கள் தொடர்­பு­டைய மூன்று பெட்டகங்களைத் திறந்­தது.

அதில் ஒரு வங்கிப் பெட்டகத்தில் 91.5 கிலோ தங்­கக் கட்­டி­களும் மற்ற இரு லாக்­கர்­களில் 152 கிலோ வெள்­ளி­யும் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இது­த­விர ரக்‌ஷா புல்­லி­யன் நிறு­வ­னத்­தில் 188 கிலோ வெள்ளி கண்­டெ­டுக்­கப்­பட்­டது. இவற்றை அம­லாக்­கத் துறை பறி­மு­தல் செய்­துள்­ளது.