இவ்வாண்டு முதல் பாதியில் நடந்த பெரும்பாலான வேலையிட மரணங்கள் கட்டுமானத் தளங்களில் நடந்தன். கட்டுமானத் தளங்களில் ஏற்பட்ட விபத்துகளில் பத்து பேர் மாண்டனர், 84 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து கட்டுமானத் தளங்களில் அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்தாண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் முதல் பாதி வரை, 63 வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. பாதுகாப்பற்ற வேலையிட நடைமுறைகள், ஊழியர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் போக்குகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானத் தளங்களுக்கு இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. சில நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு செப்டம்பர் நிலவரப்படி 37 வேலையிட மரணங்கள் நடந்தன. ஆக அண்மையாக கிராப் உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் செப்டம்பர் ஒன்றாம் தேதி மாண்டார்.
வேலையிடங்களில் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடைமுறைகளை மனிதவள அமைச்சு இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்கள் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு சேர்க்கமுடியாது. இதோடு, அடுத்த ஆறு மாதங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும்.
கட்டுமானம், உற்பத்தி, கடல்துறை, போக்குவரத்து போன்ற துறைகளையும் கனரக வாகனங்களை பயன்படுத்தும் துறைகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும்.

