மும்பை: மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணி ஒருவர், தனது இடைவாரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத் துகள்களை மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்தது.
வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் ரியாத்தில் இருந்து தோகா வழியாக மும்பை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது இடைவாரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2.5 கிலோ எடையுள்ள தங்கத் துகள்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ரியாத்தில் முந்தன் என்ற ஆடவர், தன்னிடம் இந்தப் பொட்டலத்தைக் கொடுத்து மும்பைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்து அதற்காக ரூ.20,000 பணம் தந்ததாக அவர் தெரிவித்தார். காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.

