ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று ஒரே நிகழ்வு இரு கோணங்களில் கொண்டாடப்பட்டது. ஹைதராபாத்தை ஆண்ட நிஜாமின் ஆட்சி முடிவுக்கு வந்து அவர் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு இந்திய ஒன்றியத்துடன் இணைந்த நாளை பாஜக நேற்று ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடியது.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய உள்துறை அமைச்சர், நிஜாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்ததற்கு சர்தார் வல்லபாய் பட்டேல்தான் காரணம் என்று புகழாரம் சூட்டினார். அவர் அவ்வாறு செய்திருக்காவிடில் அகண்ட பாரத இலக்கு நிறைவேறியிருக்காது என்றார் அவர்.
ஆனால் இந்தத் தினத்தை ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடினால் வாக்குகள் கிடைக்காது என்று பயந்து கடந்த 75 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் ஆட்சி அமைத்த அரசியல் தலைவர்கள் அதை அவ்வாறு கொண்டாடவில்லை என்று திரு அமித் ஷா சாடினார்.
ஹைதராபாத் விடுதலை தினத்தைக் கொண்டாட முடிவு எடுத்ததற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு ஷா நன்றி தெரிவித்தார்.
1948ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று நிஜாமின் கட்டுக்குள் இருந்த ஹைதராபாத் மாநிலத்துக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் போலோ என்று பெயரிடப்பட்டது. இதை அடுத்து, ஹைதராபாத் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியானது.
இதற்கிடையே, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அம்மாநிலத்தில் மூன்று நாள் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. தெலுங்கானா அரசு இந்தத் தினத்தை தெலுங்கானா தேசிய ஒருங்கிணைப்பு நாளாகக் கொண்டாடுகிறது.
கொண்டாட்டத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளிலும் பேரணிகள் நடத்தப்பட்டன.
கொண்டாட்டத்தின்போது உணர்ச்சி பொங்க பேசிய அமித் ஷா. படம்: ஏஎஃப்பி

