மின்தூக்கிக் கதவுகளுக்கு இடையே சிக்கி உயிர் இழந்த ஆசிரியை

மின்தூக்கிக் கதவுகளுக்கு இடையே சிக்கி உயிர் இழந்த ஆசிரியை

1 mins read
334a6c32-7924-470e-823d-b8728d7f44d1
மின்தூக்கிக் கதவுகளுக்கு இடையே சிக்கி உயிர் இழந்த மும்பை ஆசிரியை. படம்: இந்திய ஊடகங்கள் -

மும்பைப் பள்ளியில் உள்ள மின்தூக்கிக் கதவுகளில் சிக்கிக் கொண்டதால் 26 வயது ஆசிரியை உயிரிழந்தார் என்று மும்பைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மும்பையில் உள்ள மாலாட் எனும் இடத்தில் இருக்கும் செயிண்ட் மேரிஸ் ஆங்கில உயரநிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சம்பவம் நடந்தது.

ஆறாவது மாடிக்குச் செல்வதற்காக இரண்டாவது மாடியில் மின்தூக்கிக்காக ஜெனெல் ஃபெர்னான்டஸ் காத்திருந்தார்.

அவர் மின்தூக்கிக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது அதன் கதவுகள் மூடிக் கொண்டன.

ஜெனெல் கதவுகளுக்கிடையே சிக்கிக்கொண்ட அதே நேரத்தில் மின்தூக்கி மேலே செல்லத் தொடங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பள்ளி ஊழியர்கள் உதவிக்கு ஓடி, அவரை வெளியே இழுத்தனர்.

ஆனால் அதற்குள் ஜெனெல் கடுமையாகக் காயமடைந்திருந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் மாண்டுவிட்டார் என்று கூறப்பட்டது.

விபத்து காரணமாக மரணம் நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஜெனெல் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் தான் அப்பள்ளியில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார் என்றும் கடந்த ஆண்டு அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது என்றும் இந்திய ஊடகங்கள் கூறின.