புதுடெல்லி: பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பாக கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையேயான பனிப்போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
உரிய தகுதி உள்ளபோதிலும் தமக்குத் தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிலர் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால் பல்கலைக்கழக விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிரான புகார்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உறவினர்கள் சிலர் சட்டத்தை மீறி அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய நியமனங்களுக்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீஸ், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆரிப் முகம்மது கான், மாநில அரசின் செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்தார்.
இதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் பினராயி விஜயன், தமது உதவியாளரின் உறவினர்கள் என்பதற்காக அவர்கள் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கக் கூடாது என்று கூற முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
"ஒரு வேலைக்காக விண்ணப்பிக்கும்போது அவர்கள் என்னிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியமும் கிடையாது. தகுதி இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் வேலையில் சேரக்கூடாது என்று கூற ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது.
"இதற்காகத்தான் ஆளுநர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறாரா? வேந்தர் பதவியும் இதற்குத்தான் பயன்படுகிறதா," என்றும் முதல்வர் பினராயி விஜயன் பல கேள்விகளை அடுக்கி உள்ளாா்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கேரள அரசுக்கு எதிரான புகார்களை நிரூபிக்கும் முக்கிய ஆவணங்களை தாம் விரைவில் வெளியிடப்போவதாகக் கூறினார்.
பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பும் ஆளுநர்

