ஹைதராபாத்: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்குப் பயிற்சி அளிக்க முகாம்களை நடத்தியதாக 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அமைப்புடன் தொடர்புடைய நாற்பது இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் பகுதியில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுவதற்காக 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு ரகசியமாகப் பயிற்சி அளிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி நான்கு பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்தது.
இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அதன் அதிகாரிகள் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இவ்விரு மாநிலங்களிலும் நேற்று நாற்பது இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்தல், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்க முயற்சி செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை தெலுங்கானாவில் 38 இடங்களிலும் ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் நடந்த சோதனையின்போது பல மின்னிலக்க கருவிகள், முக்கிய ஆவணங்கள், இரு கத்திகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் இந்தச் சோதனை தொடர்பாக நான்கு பேர் கைதாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.

