செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ca3c3694-1fab-440d-b84f-93118dfb1137
-

நாடு தழுவிய அளவில் 100,000 பேர் ரத்த தானம்: அமைச்சர் பெருமிதம்

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ரத்த தான இயக்கத்தின் மூலம் சுமார் நூறாயிரத்துக்கும் மேற்பட்டோர் ரத்தக் கொடையாளர்களாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா பெருமிதம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ரத்த தான முகாம் மூலம் 100,506 பேர் ரத்த தானம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ரத்த தானம் செய்தவற்கு, அதற்கான அதிகாரபூர்வ இணையத்தளத்தில் 207,313 பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துகிறது பாஜக: சாடும் ராகுல்

திருவனந்தபுரம்: பாஜக தலைமை தனது பண பலம், அதிகா ரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்வதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கோவா உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைவர்கள் கட்சியைவிட்டு விலகிச்செல்ல பாஜகவின் சதித்திட்டமே காரணம் என அவர் சாடினார். அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் முக்கியத் தலைவர்கள் பலர் விலகி வருகின்றனர். இதையடுத்து முதன்முறையாக காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக சதி செய்வதாக ராகுல் சாடியுள்ளார்.

எடியூரப்பா மீது லஞ்ச வழக்கு பதிவு

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது லோக்ஆயுக்தா காவல்துறையினர் லஞ்ச வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைநகர் பெங்களூரில் வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்குச் சொந்தமான நிலத்தை வழங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக எடியூரப்பா லஞ்சம் பெற்றார் என்பதே புகாராகும்.

ஒரே நாளில் 500 பேருக்கு டெங்கி

புதுடெல்லி: ஒரே நாளில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 500 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 548 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.