மும்பை: பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தரகர் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரையும் தன் வலையில் விழவைக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
ஜான்வியைப் போலவே மேலும் பல இளம் நடிகைகளை தன்வசப்படுத்த அவர் பல கோடிகளை வாரி இறைத்திருப்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர். அந்த வகையில் சிறைவாசம் அனுபவித்து வரும் ஒரு தொழிலதிபரின் மனைவியிடம் அவரது கணவரை வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி பெற்று ஏமாற்றி உள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் திரைப்பட நடிகைகள் பலருடனும் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மோசடி செய்து திரட்டிய பணத்தில் பல கோடிகளை நடிகைகளுக்காக அவர் வாரி இறைத்துள்ளார்.
நடிகைகளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை அளிப்பதுதான் அவரது வழக்கம். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு இரண்டு கார்களை அவர் பரிசளித்துள்ளார். தமக்காக கோடிக்கணக்கில் செலவிடும் சுகேஷை திருமணம் செய்து கொள்ள ஜாக்குலின் விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
அதனால்தான் சுகேஷ் மோசடி செய்வது தெரிந்தும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் அவரும் வழக்கில் சிக்கியுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் மேலாளருக்கும்கூட எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தைப் பரிசளித்துள்ளார் சுகேஷ்.
மேலும், மாடல் அழகிகள் சிலருக்கும் அவர் வலைவீசி உள்ளார். நடிகைகளுக்குப் பரிசளிப்பதற்கு மட்டும் அவர் இருபது கோடி ரூபாய் செலவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கும் சுகேஷ் தூது விட்டார் என்றும், ஜான்வி அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தித் திரையுலகின் இளம் நடிகைகளான பூமி பெட்னேகர், சாரா அலிகான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுகேஷ். அந்த வகையில் ஜான்வி கபூருக்கும் விருந்து நிகழ்வுகளில் பங்கேற்க தூது அனுப்பி உள்ளார்.
ஆனால் இந்த இளம் நடிகைகள் சுகேஷை நெருங்கவில்லை. சில இளம் நடிகைகள் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டா லும் சுகேஷிடம் சிக்கவில்லை எனத் தெரிகிறது.

