மும்பை: மின்தூக்கியின் கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட இளம் பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் மும்பை மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து மும்பை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
விபத்தில் சிக்கிய 26 வயதான ஜெனல் ஃபெர்னாண்டஸ் (படம்), ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக் கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியில் உள்ள பணியாளர் அறைக்குச் செல்ல அவர் மின்தூக்கியைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், மின்தூக்கிக்குள் செல்ல முயன்றபோது அதன் கதவுகள் திடீரென மூடிக்கொண்டன. இதனால் இரு கதவுகளுக்கு இடையில் அவர் சிக்கிக்கொண்டார்.
அப்போது மின்தூக்கி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனால் ஜெனல் வலி தாங்காமல் அலறத் தொடங்க, பள்ளி ஊழியர்கள் அவரை மீட்க முயன்றனர். எனினும் மின்தூக்கியை நிறுத்த முடியவில்லை.
நீண்ட நேர முயற்சிக்குப் பிறகே ஆசிரியை ஜெனலை மீட்க முடிந்தது. எனினும் அவரது உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.
அதனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.